5506. துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
உரை: நிலைத்த நன்னெறியாதல் உணர்ந்து மகிழ்ந்து சுத்த பரசிவத்துக்குரிய சன்மார்க்க சங்கத்தை அடைந்து தீய நெறிகள் எல்லாவற்றையும் போக்கிவிட்டேன்; அன்றியும் நான் மேற்கொண்ட சன்மார்க்கத்தை நன்மார்க்கம் என்று சொல்லித் தேவர் உலகத்தவர்களும் புகழ்கின்றார்கள். எ.று.
சிவத்தின் திருவருள் நெறி எஞ்ஞான்றும் நிலைபெற்றதாகலான் அதனை, “மன்மார்க்கம்” என்று புகழ்கின்றார். நான் மேற்கொண்ட சன்மார்க்கத்தை வானநாட்டு வானவர்களும் நன்மார்க்கம் என்றே போற்றுகின்றார்கள் என்பாராய், “என் மார்க்கம் நன்மார்க்கம் என்றே வான்நாட்டர் புகழ்கின்றார்” என்று கூறுகின்றார். சன்மார்க்கத்தைத் தழுவிக்கொண்டாலும் துன்மார்க்கம் வேறாக நீக்கப்பட வேண்டுமாதலால், “துன்மார்க்க மெல்லாம் தொலைத்து விட்டேன்” என்று சொல்லுகின்றார். (20)
|