5507. பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு.
உரை: எங்கள் பெருமானாகிய சிவனுடைய எவ்வுயிரையும் கொல்லாத நெறியாகிய திருவருள் நெறியை யான் மேற்கொண்டதினால் பலவாகிய நெறிகள் எல்லாம் பசையற்று நீங்கின; அன்றியும் சன்மார்க்கம் ஒன்றே எங்கும் தழைக்கலுற்றது; எல்லா உலகத்தவரும் நான் சொல்லுகின்ற நன்மார்க்கத்தை உடன்பட்டு ஏன்று கொண்டனர். எ.று.
கொல்லா நெறி என்றது எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத அருள் நெறியாதலால் அதனை மேற்கொண்டமை விளங்க, “எம்பெருமான் கொல்லா நெறி அருளைக் கொண்டு” என்று கூறுகின்றார். அருள் நெறிக்கு மாறாக நெறிகள் பலவும் மறைந்துவிட்டன என்பதற்கு, “பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தன” என்று பகர்கின்றார். பசையறுதல் - இருந்த இடம் தெரியாது மறைதல். (21)
|