5508.

          சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
          நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஒதுகின்ற
          பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
          வாயாட்டம் தீர்த்தனவே மற்று.

உரை:

     சாதியென்றும் குலம் என்றும் சமயம் என்றும் மதம் என்றும் இவற்றுக்குத் துணையாகும் நீதி முறை என்றும் ஆசிரம வழக்கென்றும் பலராலும் சொல்லப்படுகின்ற பேயாட்டம் எல்லாம் நீங்கி ஒழிந்தன; பிறர் கூறுகின்ற, வாய்ப் பேச்சுக்களும் நீங்கின. எ.று.

     சாதி குலம் சமயம் மதம் என்று பேசப்படுகின்ற கொள்கைகளும், நீதி நெறி என்னும் ஆசிரம வழக்கங்கள் என்றும் ஒரு நெறியாகப் பேசப்படுவன அல்லவாதலால் அவற்றை, “பேயாட்டம்” என்று பேசுகின்றார். பிதிர்தல் - நீங்குதல். பொருளற்ற பேச்சுக்களைப் பேசுவதை, “வாயாட்டம்” என்று வழங்குகின்றார்.

     (22)