5509.

          சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
          வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
          நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
          தாயே அனையான் தனித்து.

உரை:

     எனக்குத் தாய் போன்றவனாகிய சிவபெருமான் என்னிடம் தனியாக வந்து என்னுடைய மனவருத்தங்களைப் போக்கி என்பால் வந்து என்னை வலிய அழைத்துப் படைத்தல் முதலிய ஐந்து தொழிலையும் நீயே செய்க என எனக்கு அன்புடன் அளித்தான். எ.று.

     சிந்தா குலம் - மனவருத்தம். திருச்சிற்றம்பலத்தில் ஞானக் கூத்து ஆடுபவனாதலால், “சிற்றம்பலப் பெருமான்” என்று கூறுகின்றார். சிவ சமவாதக் கொள்கையை மேற்கொண்டுரைப்பது விளங்க, “ஐந்தொழிலும் நீயே செய் என்றெனக்கு நேர்ந்தளித்தான்” என மொழிகின்றார். தாயினும் நல்ல சங்கரன் என்பதால், “தாயே அனையான்” என்று போற்றுகின்றார்.

     (23)