5510. கூகா எனஅடுத்தோர் கூடி ஆழாதவண்ணம்
சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்
ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
மாகா தலனா மகிழ்ந்து.
உரை: ஒன்றாகிய ஏகப் பொருள் என வேதங்கள் ஓதுகின்ற அம்பலவாணன் மிக்க அன்புடையவனாய் உறவினரும் பிறரும் ஒன்று கூடிக் கூகா என அழுது வருந்தாதபடிச் சாகா வரத்தை எனக்குத் தந்து என்னை விட்டு நீங்காமல் இருக்கின்றான். எ.று.
வேதங்கள் அம்பலத்தாடும் சிவபெருமானைப் பரம்பொருள் வகையில் ஒன்றே என ஓதுவதால், “ஏகா என மறைகள் ஏத்தும் சிற்றம்பலத்தான்” எனத் தெரிவிக்கின்றார். அடுத்தோர் - உறவினரும் நண்பரும் பிறரும் ஆகியோரைக் குறிக்கின்றது. ஒருவர் இறந்த வழி அவருடைய உறவினரும் நண்பரும் சுற்றத்தாரும் பிறரும் கூடியிருந்து அழுவது இயல்பாதலால், “கூகா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம்” எனக் கூறுகின்றார். வரம் தந்த பெருமான் கூடி உறைவது பற்றி, “ஏகான்” என இயம்புகின்றார். (24)
|