5511.

          நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமுதே நான்உலகில்
          ஆடுகின்ற தெந்தைஅருள் - ஆட்டமதே - பாடுகின்ற
          பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
          நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.

உரை:

     நான் நாடுவதெல்லாம் எங்கள் பெருமானாகிய சிவனுடைய நாட்டமேயாகும்; அப்பெருமானுடைய திருவருள் ஆட்டத்தையே நானும் உலகில் ஆடுகின்றேன்; நான் பாடுகின்ற பாட்டெல்லாம் அந்த அம்பலவாணனுடைய திருவடியைப் பாடுகின்ற பாட்டேயாகும்; நான் நெடிது பேசுவதெல்லாம் அவனுடைய நீடிய புகழேயாகும். எ.று.

     நாடுதல் - விரும்புதல்; நோக்கமுமாகும். ஆடுதல் - செய்யும் செயல் வகைகள். மக்கள் செய்யும் செயல்கள் யாவும் இறைவனுடைய அருள் இயக்கம் என அறிந்தோர் கூறுவதால், “அருளாட்டம்” என அறிவிக்கின்றார். நீட்டெல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு என்றவிடத்து, நீட்டெல்லாம் என்றது சொல்லுவோர் சொல்லினுடைய நெடுமையை உணர்த்துகின்றது. நீட்டு என்றது இறைவனுடைய நீண்ட புகழைக் குறிக்கின்றது.

     (25)