5512.

          சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
          சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
          றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
          நண்ணுமின்பத் தேன்என்று நான்

உரை:

     உலகத்து நன்மக்களே! நான் சத்தியமாகச் சொல்கின்றேன் அறிவீர்களாக; எல்லாச் சித்திகளிலும் வல்ல சிவ பரம் பொருள் ஒன்றே நித்தியப் பொருள் என்று எண்ணுகின்ற எண்ணத்தாலேதான் நான் எண்ணும் எண்ணமெல்லாம் கைகூடுகின்றன; அதனால் பொருந்துகின்ற இன்பத்தை நான் உடையவனாயினேன் என்று அறிவீர்களாக. எ.று.

     (26)