5513.

          நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்அருளால்
          நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
          அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
          இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.

உரை:

     இவ்வுலகில் குறைவில்லாமல் அருட் செயலில் ஈடுபடுகின்ற நான் நம் பெருமானுடைய திருவருளால் அருட் சித்திகளைப் பெற்ற நாடாகிய இன்ப உலகத்தை அடைந்து கெடாத வடிவமாகிய மூன்றையும் பெற்றுக் கொண்டேன்; ஆதலால் நான் சிறந்த தவம் புரிந்தேனாயினேன். எ.று.

     அருட் செயல்களைப் புரிவதை ஆடுதல் என்கின்றாராதலால், “இழியாமல் ஆடுகின்றேன் இங்கு” என்று கூறுகின்றார். அருட் சித்தி நாடு என்றது திருவருளால் பெறலாகும் கன்ம யோக ஞான சித்திகள் நிறைந்த இன்ப உலகம். தவமும் சிவனருளால் கைகூடுவதாதலால், “நம்பெருமான் நல்லருளால்” என்று நவில்கின்றார். அழியா வடிவம் - அருவும் உருவும் அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்கள்.

     (27)