5514. எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி.
உரை: எல்லா உலகங்களையும் அவற்றைத் தன்கண் கொண்ட அண்டங்கள் அனைத்தையும் நான் இவ்வுலகில் இருந்துகொண்டே காணுமாறு எனக்கு அளித்தான்: ஆதலால் எவ்வுயிரையும் சன்மார்க்க சங்கத்தை அடையுமாறு செய்து எனக்குரிய திருவருள் மார்க்கத்தையும் நான் இனிக் காண்பேனாயினேன். எ.று.
எல்லா உயிர்களையும் சன்மார்க்க சங்கத்தில் சேருமாறு செய்வது தனது கடமையாதலால், “இனி என்மார்க்கம் காண்பேன்” என்று கூறுகின்றார். இவ்வாறு கூறுதற்குக் காரணம் உலகுகளையும் அண்டங்களையும் தான் இவ்வுலகில் இருந்துகொண்டே காணுமாறு இறைவன் தனக்குச் செய்த அருளாகும் என்பது கருத்து. (28)
|