5515.

          சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
          நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
          சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
          உற்றிங் கறிந்தேன் உவந்து.

உரை:

     சாத்திரங்கள் யாவையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுச் சொல்வனவே அன்றி முகத்தில் உள்ள கண் போலத் தெளியக் காட்டுவன அல்ல; நேத்திரங்களோ எனில் சிற்றம்பலத்தில் எழுந்தருளும் சிவபெருமானுடைய திருவருளின் சிறந்த இயல்பாம் என்று இவ்வுலகில் பொருந்தி மகிழ்ச்சியுடன் அறிந்துக்கொண்டேன். எ.று.

     சாத்திரங்கள் ஒன்று போலின்றித் தடுமாற்றமுற்றுக் கால இடங்களுக்கு ஏற்ப மக்களால் செய்யப்படுவன என்பதனால் அவற்றை, “நேத்திரங்கள் போல காட்ட நேராவேன்” என்று உரைக்கின்றார். நேத்திரங்கள் - கண்கள். அவை பார்ப்பது திருவருளின் செயலாதலின், “திருவருள் சீர்வண்ணம்” என்று செப்புகின்றார்.

     (29)