5516. வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை.
உரை: வேதவாக்கு என்றும் ஆகம உரை என்றும் வீணே வாதம் புரிகின்றீர்கள்; அவற்றின் விளைபயனை நீங்கள் அறிய மாட்டீர்கள்; அவை பொய்யாகச் சொல்லப்பட்டனவே அன்றி உண்மையை வெளிப்படையாகத் தோன்றும்படி உரைக்கவில்லை; ஆகவே அவற்றால் ஒரு பயனுமில்லை. எ.று.
வேதங்களும் ஆகமங்களும் இச்சித்திகளையும் அருள் நெறிகளையும் சன்மார்க்கத்தையும் எடுத்தோதாமையால், “வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்” என்று விளம்புகின்றார். அவற்றால் பயன் இன்மை குறித்தற்கு, “வேதாகமத்தின் விளைவு அறியீர்” என்றும், “என்ன பயனோ இவை” என்று இயம்புகின்றார். சூது - பொய். (30)
|