5517.

          சாகா கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
          வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
          தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
          நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.

உரை:

     அழியாத கல்வியின் பயனே அறிய வேண்டும்; எக் காலத்தும் வெந்தழியாத பிராண வாயு என்னும் காற்றின் பயனை உணர்தல் வேண்டும்; அதனால் சாவாத நிலை உண்மையை அறிந்து கொள்ளவேண்டும்; இவற்றிற்கெல்லாம் காரணமாகிய ஒப்பற்ற திருவருளால் உண்மை ஞான நிலையை நாம் அடைதல் வேண்டும். எ.று.

     சாகாத கல்வி - அழிவில்லாத சிவஞானக் கல்வி. பிராண வாயு எங்கும் நிலவுவதோடு தேகத்துள்ளும் இயங்கி மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆதாரங்களில் பொருந்தித் துவாதசாந்தத்தை அடைந்து அமுதம் பயப்பது மூலாக்கினி என்பர். இதனைச் சாகாத் தலை என்றும் கூறுவர். சாகாத் தலையை ஆகாசம் என்றும், வேகாக் காலை வாயு என்றும், இவற்றிற்கு இனமான போகாப் புனலை அக்கினி என்றும் சொல்லி, சாகாத் தலையை உருத்திர பாகம் எனவும் உருத்திர தத்துவம் எனவும், வேகாக் காலை மயேசுவர பாகம் எனவும் மயேசுவர தத்துவம் எனவும், போகாப் புனலைச் சதாசிவ பாகம் எனவும் சதாசிவ தந்துவம் எனவும் உபதேசப் பகுதி கூறுகின்றது. சாகாக் கல்வியும் வேகாக் காலும் போகாப் புனலும் சாகாத் தலையை அறிதற்குத் துணை செய்வன என்பர். இம் மூன்றையும் சாகாக் கல்வி எனபதும் உண்டு. இவைகளின் உண்மைப் பொருளை யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம் எனவும் இவை யோக அனுபங்கள் எனவும் உபதேசப் பகுதி கூறுகின்றது.

     (31)