5518.

          பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
          பொய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
          சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
          இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.

உரை:

     ஐயனாகிய சிவபெருமான் எல்லாச் சித்திகளும் பொருந்திய தனது திருக்கூத்தை இவ்வுலகில் இன்று தொடங்கி இடையறாமல் ஆடுகின்றான் என்று நாம் உரைக்கும் இதனைப் பொய் மொழி என்று எண்ணுவீர்களாயின் வெளியே போய்விடுவீர்களாக; அன்பு மெய்யுரை என்று கருதுவீர்களாயின் உள்ளே எம்பால் வந்திடுக. எ.று.

     இறைவன் அருட் கூத்தாடும் அம்பலத்தில் நின்று பேசுகின்றாராதலால், “பொய்யுரை என்று எண்ணுதிரேல் புறக்கடையில் போமின் மெய்யுரை என்று எண்ணுதிரேல் மேவுமின்” என்று விளம்புகின்றார். உலவுதல் - கெடுதல்; இடையறவு படுதலுமாம்; புறக்கடை - வெளிப்புறம்.

     (32)