5519.

          வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
          தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
          மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
          இங்குநடஞ் செய்வான் இனி.

உரை:

     தேவருலகத்துத் தேவர்களும் திருமாலும் பிரமனும் மற்ற தேவர்களும் முதலிடத்தில் வந்து நிறைந்து விட்டார்கள்; தேன் போன்ற இனிய சொற்களையுடைய சிவகாமவல்லியாகிய உமாதேவியுடன் எங்கள் பெருமானாகிய சிவன் இங்கே எழுந்தருளித் தனது இனிய நடனத்தைச் செய்தருளுவான். எ.று.

     தேவருலகத்தையே தமக்கு இடமாகக் கொண்டவர்களாதலால், “வான் வந்த தேவர்கள்” என்று புகழ்கின்றார். தலைக்கடை - முதல் இடம். சிவகாமவல்லி பெண்ணாதலால், “மங்கை சிவகாமவல்லி” என்று சொல்லுகின்றார்.

     (33)