5520.

          சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
          சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்
          ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
          வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.

உரை:

     அருட் சத்திகள் பலவும் தன்னிடத்தே கொண்ட தந்தையாகிய கூத்தப் பெருமானும், எல்லாச் சித்திகளையும் செய்ய வல்லவனும், திருவாளனும், நித்தியப் பொருளாகியவனுமாகிய சிவபெருமான் பல ஊழிகள் கழிந்தாலும் இவ்விடத்தே நீங்காமல் இருந்தருளித் தனது ஞானத் திருக்கூத்தை ஆடி அருளுவான். எ.று.

     அருட் சத்திகள் பலவாதலின் நடராசப் பெருமானை, “சத்தியெலாம் கொண்ட தனித் தந்தை” என்று கூறுகின்றார். சித்தி - கன்ம யோக சித்திகள். ஓவுதல் - நீங்குதல்.

     (34)