5521. இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்
சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.
உரை: உலகத்து நன்மக்களே! இன்று தொடங்கி எக்காலத்தும் எங்கள் பெருமானாகிய சிவபெருமான் நன்மை விளங்க இங்கே திருக் கூத்தாடி அருளுவான்; எக்காலத்திலும் என் சொல் சத்தியமானது என்று மனதிற்கொண்டு அவன்பால் வந்து அடைவீர்களாக; அதனால் நீங்கள் நித்தியமாக இன்ப வாழ்வு பெற்று மகிழலாம். எ.று.
அப்பெருமான் ஆடுகின்ற திருக்கூத்தால் உலகுகட்கு நன்மையே உண்டாகும் என்பாராய், “எம்பெருமான் எந்நாளும் நன்று துலங்க நடம் புரிவான்” என்று கூறுகின்றார். சத்தியம் - மெய்ம்மையானது. சகத்தீர் - உலகத்து நன்மக்களே. நித்தியம் என்பது இங்கே நிலைத்த பேரின்ப வாழ்வைக் குறிக்கின்றது. இந்நான்கு பாட்டுக்களும் (5518 முதல் 5521 வரை) வடலூரின்கண் சிற்சபை தோன்றியது கண்டு கூறியவை போலும். (35)
|