5522.

          என்உடலும் என்பொருளும் என்உயிரும் தாண்கொண்டான்
          தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே
          தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
          வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து.

உரை:

     என்னுடைய உடம்பையும் பொருளையும் உயிரையும் தான் எடுத்துக்கொண்டு தன்னுடைய உடல் பொருள் உயிர் மூன்றையும் என்னிடத்தே கொடுத்துவிட்டான்; அன்றியும் அருள் நிறைந்த ஞானசபையில் எழுந்தருளும் அப்பனே என்று அவனை நான் அழைத்தேனாக, அவன் மகிழ்ந்து என்பால் வந்தான். எ.று.

     தன்னுடைய பசுகரணங்கள் மூன்றையும் தனதாக்கித் தன்னுடைய சிவகரணங்களை எனக்குத் தந்து என் உள்ளத்தில் கோயில் கொண்டான் என்பது கருத்து. அருளொளி திகழும் ஞானசபையாதலால் அதனை, “அருள் சிற்சபை” என்று குறிக்கின்றார்.

     (36)