5523.

          செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
          கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
          அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
          தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.

உரை:

     எம்மனோர்களே! செத்தவர்களை எல்லாம் திரும்ப உயிர் பெற்று எழச் செய்தல் எதனால் முடியும் என்று கேட்பீரேல் ஞானப் பொருளாகிய அருட் பெருஞ் சோதியால் முடியும் என அறிமின்; நான் சொல்லும் இது தெளிவான உண்மை உரையாகும். எ.று.

     செத்தவர்கள் மீள உயிர் பெற்று எழுதல் இவ்வுலகில் இல்லை என்பது உலகு அறிந் செய்தியாதலால் அவர்கள் மனத்திற் கொள்ளும் ஐயத்தை நீக்குவதற்கு, “செத்தாரைத் திரும்ப எழுப்புவதற்கு இங்கு எத்தால் முடியும் எனில்” என வினாவிக்கொண்டு அதற்கு விடைகூறுவாராய், “சித்தாம் அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்” என உரைக்கின்றார். தெருட்பெருஞ் சத்தியம் - தெளிவு நிறைந்த மிகப்பெரிய உண்மை.

     (37)