5524.

          இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
          எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
          சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
          உற்றவரை உற்றவர்கள் உற்று.

உரை:

     செம்மை நிறைந்த இவ்வுலகில் திருச்சிற்றம்பலத்தில் உள்ள சிவனுடைய திருவருளை நிறையப் பெற்றவர்களின் அருள் நோக்கத்தைப் பெற்றவர்களும் அவருடைய அருளைப் பெற்றவர்களும் இவ்வுலகில் செத்தவர்களைப் பார்த்து அருள் கூர்ந்து எழுக என்பாராயின் எவ்வுலகத்தில் உள்ளவரும் போற்றுமாறு எழுந்திருப்பார்கள் என அறிக. எ.று.

     அருள் நோக்கம் உற்றவரை உற்றவர்கள், திருவருள் நோக்கம் பெற்றவர்களையும் அவர்களின் அருளைப் பெற்றவர்களையும் குறிப்பதாம். செவ்வுலகு - செவ்விய மனமும் செவ்விய நினைவும், செவ்விய செயலும் உடையவர்கள் நிறைந்த உலகம்.

     (38)