5525.

          யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
          ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான்புரிந்த
          அம்பலத்தான் நல்அருளால் அந்தோநான் மேற்போர்த்த
          கம்பலத்தால் ஆகும் களித்து.

உரை:

     இவ்வுலகத்தில் செத்தவர்களை ஊனாலாகிய உடம்போடு மீள உயிர் பெற்று எழச் செய்வதை நான் செய்தல் வேண்டும் என்பது இல்லை; பெருமை பொருந்தி அம்பலவாணனுடைய உயர்ந்த திருவருளால் நான் மேலே போர்த்துக்கொண்டு இருக்கின்ற போர்வையாலும் அதனைச் செய்ய முடியும். எ.று.

     உலகிற் பலரும் செத்தாரை எழுப்புவது ஆகாது ஒன்றாயிற்றே அங்ஙனமிருக்க அதனை நீவிரே செய்து காட்டுக என்று கேட்பது தோன்ற, “யான் புரிதல் வேண்டுங் கொல்” என்று கூறுகின்றார். அம்பலத்தில் ஆடும் பெருமானுடைய திருவருள் எய்துமாயின் அசேதனமான கம்பலமும் அதனை மகிழ்வோடு செய்யும் என்பாராய், “நான் போர்த்த கம்பலத்தால் ஆகும் களித்து” என்று உரைக்கின்றார். கம்பலம் - போர்வை.

     (39)