5526. என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றோர்க்
குருவம் பலத்தேஎன் றுன்.
உரை: என்னே இவ்வுலகத்தில் இறந்தவர்கள் மீளவும் உயிர் பெற்று எழுவதென்பது மிகவும் அதிசயமாக உளது என்று பலரும் ஆரவாரம் செய்கின்றார்கள்; இப்பொழுதே திருச்சிற்றம்பலத்தில் ஆடும் பெருமானுடைய திருவருள் நோக்கத்தைப் பெற்றவர்களுக்கு உடம்பொடு கூடி எழுதல் திருவருள் வலிமையால் ஆகும் என்று மனங்கொள்வீராக. எ.று.
என்னே - வியப்பிடைச் சொல். அன்னே - உரை யசை. ஆடுதல் - ஈண்டு ஆரவாரம் செய்தல். உருவம் - உயிர் பெற்றெழுதல். பலம் - வலிமை. அம்பலத்தான் அருள் நோக்கம் பெற்றவர் எல்லார்க்கும் செத்தாரை எழுப்புவது முடிவதாம் என்பது கருத்து. (40)
|