5527. ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
கென்மார்க்க மும்ஒன்றா மே.
உரை: நன்மக்களே! சிறிதும் ஆடாமலும் அசையாமலும் வேறு யாதொன்றையும் நாடாமல் பொய்யாகிய உலக போகங்களை விரும்பாமலும் வருந்தாமலும் இருந்துகொண்டு சன்மார்க்க சங்கத்தில் விரைந்து சேர்ந்துகொள்வீர்களாக; சேர்ந்து கொண்டால் நீங்கள் விரும்பும் மார்க்கமும் என் மார்க்கமும் ஒன்றாகும். எ.று.
வேறு உலகியல் சங்கங்களை விரும்பாமல் அமைதியுடன் இருப்பீர்களாக என்பாராய், “ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர்” என்று கூறுகின்றார். அமைதியாக இருக்கும் நிலையை, “ஆடாமல் அசையாமல் இருத்தல்” என்பது உலக வழக்கு. பொய்யுலக போகங்களை நம்பினால் தொடர்ந்து துன்பம் எய்துமாதலால், “பொய்யுலகை நம்பாதீர் வாடாதீர்” என்று புகல்கின்றார். நீங்கள் விரும்புகின்ற வேறு மார்க்கங்கள் யாவையும் சன்மார்க்க சங்கத்தில் அடங்குமாதலால், “இங்கு என் மார்க்கமும் ஒன்றாமே” என்று கூறுகின்றார். (41)
|