5528. மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது
தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்
நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.
உரை: பெரிய நிலவுலகத்தில் உள்ளவர்களே! நன்மார்க்கம் என்று சொல்வதெல்லாம் பயன்தரும் வகையில் ஒன்றாகும்; இது உண்மையாதலால் மடிமையுற்றிருக்கும் செயல் பலவும் களைந்துவிட்டு மனம் துணிந்து ஒன்றைப் பெறாமையால் இயங்குவதையும் கைவிட்டுச் சன்மார்க்க சங்கத்தை சேர்வீர்களாக; அதன் பயனாக இப்பொழுது நன்னெறியை அடைந்தவராவீர்கள்; இது சத்தியம். எ.று.
மாநிலம் - மண்ணுலகம். தாம் கூறுவதை வற்புறுத்துவதற்கு, “வாய்மை இது” என்றும், “சத்தியம்” என்றும் கூறுகின்றார். தூக்கம் - மடிமை; சோம்பலுமாம். (42)
|