5529. இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
நன்னாள்என் வார்த்தைதனை நம்புமினோ - இந்நாள்
அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்
அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.
உரை: செத்தவர்கள் உயிர்பெற்று எழுகின்ற நன்னாள் இந்த நாளேயாதலால் இதனை எடுத்துரைக்கும் என்னுடைய வார்த்தைகளை உண்மை என்று நம்புவீர்களாக; அன்றியும் இந்த நன்னாள் அருட் பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானம் நம்மை வந்தடைகின்ற நன்னாளாகும்; நான் உரைக்கும் இது அருட்பெருஞ் சத்தியமாதலின் ஏற்றுக் கொள்வீர்களாக. எ.று.
இறந்தார் எழுகின்ற நான்னாள் என்பதற்கு உயிர் நீத்து உணர்வு இழந்தவர் அதனைப் பெற்று எழுகின்ற நன்னாள் என்று உரைப்பதும் உண்டு. அருட்பெருஞ் சோதி என்பது திருவருள் ஞான ஒளியாகும். அருட்பெருஞ் சத்தியம் திருவருள் ஞானத்தால் உரைக்கப்படும் உண்மை உரை. (43)
|