5530. ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்
சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த
காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்
நீரத்தைச் சேர்வீர் நிஜம்.
உரை: மயங்கியிருக்கும் எம்மவர்களே! இவ்வுலகில் செத்து மடியும் மக்கள் ஆகாத நலம் பெறுவதற்குக் காம இச்சையாகிய இருள் அறிவைக் கைவிட்டுச் சன்மார்க்கத்தை நினைப்பீர்களாக; நினைத்த வழி இப்பொழுதே அந்த நன்மார்க்கத்தைப் பெறுவீர்கள்; இது உண்மை. எ.று.
ஏமாந்திருத்தல் - சன்மார்க்கத்தை நினையாமல் உலக போகங்களில் மயங்கிக் கிடத்தல். சாமாந்தர் - இறந்தொழியும் ஏனை மக்கள். காமாந்தகாரம் - காமவிச்சை ஆகிய அந்தகாரம்; அஃதாவது காமவிச்சையால் விளையும் அஞ்ஞானம். அத்தைச் சேர்வீர் என்பது அதனைச் சேர்வீர் என்னும் பொருள் தருவது. அதனை என்பது அத்தை என வந்தது. அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார் போல. நிசம் - உண்மை. (44)
|