5532.

          போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
          நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
          அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
          றிப்புவியில் இத்தருணம் இங்கு.

உரை:

     நான்கு திசைகளிலும் வாழ்கின்ற நம்மவர்களே! உங்களுக்கு விரும்பிச் சொல்கின்றேன்; இதனைப் பொய்யுரை என்று இகழ வேண்டாம்; ஆற்றல் பொருந்திய அருளுருவாகிய சிவபெருமான் தனது அருள் விளையாட்டுக்களை ஆடுதற்கு என்று இவ்வுலகில் இங்கே இப்பொழுது வருகின்றான் என அறிவீர்களாக. எ.று.

     போற்றி உரைத்தல் - விரும்பிச் சொல்லுதல். மிக்க பெரும் அருள் என்பதற்கு “ஆற்றல் அருள் அப்பன்” என்றும், “அருள் விளையாட்டு” என்றும் அறிவிக்கின்றார். இப்புவி - இவ்வுலகம்.

     (46)