130
130. உலகப் பேறு
அஃதாவது உலகத்தவர் அனைவரும் தம்பால் வரப்பெறுதல்.
அருட் சோதி ஆண்டவன் தம்பால் வருவதையே அல்லும் பகலும் நினைந்துகொண்டிருக்கும் வடலூர்
வள்ளலார், அப்பெருமான் தம்பால் வந்த வழி எய்தும் நலங்களைப் பலகாலும் எண்ணிக் கற்பனை செய்து
நோக்குகின்றார். அக்கற்பனை முழுதும் பாட்டுருவில் வருகின்றது என அறிக.
கலிவிருத்தம்
5534. இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
உரை: அருட்பெருஞ் சோதி ஆண்டவர் என்னிடம் எய்திய பொழுது உலகங்கள் யாவையும் இன்பம் நிறைந்து விளங்கின; துன்ப மிகுதியால் உயிர் நீத்தவர்கள் அத்துன்பங்கள் நீங்கி எழுந்தனர்; அன்பு மிகுதியால் மெய்யடியார்கள் ஆடிப் பாடி களித்தனர். எ.று.
துன்பங்கள் தொடர்ந்து வருவதால் பொறுக்க மாட்டாமல் உயிர் இழந்தவர்களை, “துன்பால் இறந்தவர்” என்று சொல்லுகின்றார். துன்பறுதல் - துன்பங்கள் அறவே நீங்குதல். அன்பு மிகுதியால் தம்மை மறந்து ஆடிப் பாடி மகிழ்கின்றனர் என்றற்கு, “அன்பால் அடியவர் பாடினர் ஆடினர்” என உவந்து உரைக்கின்றார். (1)
|