5535.

          பாம்பெலாம் ஒடின பறவையுட் சார்ந்தன
          தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
          ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
          தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.

உரை:

     அருட்பெருஞ் சோதி ஆண்டவன் என்பால் வந்து ஒளி விளங்க நின்றபோது விடம் பொருந்திய பாம்புகள் எல்லாம் ஓடி ஒளிந்தன; பறவை இனங்கள் உலகினுள் நிரம்ப வந்தன; இனிய பலாவும் வாழையும் மாமரங்களும் தென்னை மரங்களும் வளர்ந்தோங்கின; வாழ்க்கைக்கு வேண்டிய பயன்கள் எல்லாம் மேலும் மேலும் பெருகின; ஆகவே என் உள்ளத்தில் கெடாது காக்கவேண்டியன ஒன்றுமில்லை. எ.று.

     விடம் உடைமையால் உயிர்கட்குத் தீங்கு செய்பவை அனைத்தும் போய்விட்டன என்பாராய், “பாம்பெலாம் ஓடின” என்று பகர்கின்றார். தம்முடைய இனிய பாட்டுக்களால் இன்பம் செய்வனவாதலால், “பறவையுட் சார்ந்தன” என்று கூறுகின்றார். தீம்பலா என்றாரேனும் தீவிய வாழை இனிய மாமரமும் தென்னை மரங்களும் கொள்ளப்படும். ஆம்பலன் - உலகியல் வாழ்க்கைக்குரிய பயன்கள். ஓம்பல் - கெடாது பாதுகாத்தல். பயனுள்ள எல்லாப் பொருட்களும் நிறைதலால் காக்க வேண்டுவன ஒன்றுமில்லை என்பாராய், “என் உளத்து ஓம்பல் என்” என்று இயம்புகின்றார்.

     (2)