5536.

          மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
          வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
          பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
          நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.

உரை:

     எல்லார்க்கும் இனியவற்றையே செய்யும் அருட்சோதி ஆண்டவன் என்னிடம் வந்தமையால் உலகத்து மக்கள் அனைவரும் மலவிருள் நீங்கித் தேவர்களாகி விட்டனர்; நலம் மிக்க சுத்த சன்மார்க்கமே உலகிற் சிறந்து விளங்குவதாயிற்று; வலிமிக்க மனிதர்களும் நல்ல பண்பும் ஒழுக்கமும் உடையவராயினர். எ.று.

     ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்றையும் மலங்கள் என்பர். மலம் நீங்கியவிடத்து உயிர்களும் அஞ்ஞானம் நீங்கி இன்பம் மிகுதலால் உலகவர் வானவராயினர் என உரைக்கின்றார். வலம் - நலஞ் செய்யும் வன்மை. பலம் - அறிவாற்றலால் உண்டாகும் வலிமை. எல்லார்க்கும் இனியவே செய்யும் நற்பண்பு இங்கே “பண்புளராயினர்” என்று பரிவுடன் கூறப்படுகிறது.

     (3)