5537.

          முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
          மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
          பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
          என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.

உரை:

     அருட்பெருஞ் சோதி ஆண்டவன் என் மனத்தின்கண் எழுந்தருளியதனால் முன்பெல்லாம் நிலவிய நெறிகள் பலவும் மறைந்தொழிந்தன; நிலைத்துள்ள சுத்த சன்மார்க்க நெறியே சிறந்து விளங்குவதாயிற்று; அதனை எடுத்துரைக்கும் நன்மனம் உடையவர்களும் தெளிவுடையராயினர்; ஞானசபைத் தலைவனாகிய சிவனுடைய திருக்கூத்தும் உயர்ந்தோங்குவதாயிற்று. எ.று.

     புதியன புகுந்த வழிப் பழையன யாவும் கழிந்து நீங்குதலின், “முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன; மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது” என்று கூறுகின்றார். உண்மைகளை உரைப்பதால் மனதில் உள்ள மாசுகள் யாவும் நீங்கித் தெளிதலால், “பன்னுளம் தெளிந்தன” என்று பாடுகின்றார். படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் சிறப்புற நடைபெறுதற்கு இறைவன் திருக்கூத்து இன்றியமையாதாகலின், “பதி நடம் ஓங்கின” என்று உரைக்கின்றார்.

     (4)