5538.

          இடம்பெற்ற உயிர்எல்லாம் விடம்அற்று வாழ்ந்தன
          மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
          திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
          நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.

உரை:

திருநடம் புரிகின்ற இறைவனாகிய அருட் சோதி ஆண்டவன் இங்கு எய்துவதால் வாழ்தற்கு இடம் பெற்ற உயிர்கள் யாவையும் தீய நினைவுகளின்றி வாழலுற்றன; அறியாமை பொருந்திய மனிதர்கள் பலரும் நல்லறிவு பெற்று வாழ்கின்றார்கள்; மனோதிடம் பெற்று இறந்தவர்கள் எழுகின்றார்கள். எ.று.

     அருட் சோதி ஆண்டவனாகிய சிவபெருமான் நாள்தோறும் ஞான சபையில் நடனம் புரிபவனாதலால், “தினம் தினம் நடம் பெற்ற அருட் சோதியார்” என்று கூறுகின்றார். பரந்த உலகத்தில் இருந்து வாழ்வதால் உயிரினங்களை, “இடம் பெற்ற உயிரெலாம்” என்று சிறப்பிக்கின்றார். உயிர்கட்கு விடமாவது தீய நினைவுகள். மலப் பிணிப்பால் அறியாமையுற்று வருந்துகின்றவர்களை, “மடம் பெற்ற மனிதர்கள்” என்று கூறுகின்றார். சாகுமிடத்து உயிர்கள் வலி இழந்தொழிவதால், “செத்தவர் திடம் பெற்று எழுகின்றார்” என்று தெரிவிக்கின்றார்.

     (5)