5539. அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
உரை: என்னுடைய உள்ளத்தில் எப்போதும் எண்ணப்படும் அருட்பெருஞ்சோதி ஆண்டவன் விருப்புடன் எழுந்தருளுதலால் சகல அண்டங்களும் எல்லா உலகங்களும் அருளரசு பெற்று உயர்ந்து விட்டன; அவற்றினிடையே நிலவிய குறைகள் எல்லாம் நீங்கிவிட்டன; வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் விளைந்திருக்கின்றன. எ.று.
எண்டகும் அருட்பெருஞ் சோதியார் - எப்பொழுதும் எண்ணப்படும் அருட்பெருஞ்சோதியையுடைய இறைவன். பரிந்து எய்தவே என இயையும். அகிலம் என்றது அனைத்து உலகங்களையும் குறிப்பதாகும். அவற்றைத் தன்கண் கொண்டது அண்டம் என அறிக. கொண்டு ஓங்கின என்பது கொண்டன ஓங்கின என வந்தது. உலகியல் வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்கள் யாவையும் விளைந்து விளங்குவதால், “பண்டங்கள் பலித்தன” என்று பகர்கின்றார். (6)
|