5540.

          குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
          மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
          பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
          இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.

உரை:

     அருட்பெருஞ் சோதி ஆண்டவன் என் மனத்துக்கு இசைய எழுந்தருளியதால் எல்லா உயிர்களிடத்தும் நற்குணங்கள் மிகுந்தன; குற்றங்கள் நீங்கிவிட்டன; இன்ப மணவாழ்வே நிலவுவதாயிற்று; வாழ்வாருடைய வாழ்வுகளும் வளம் பெற்றன; உயிர் நீத்துச் செத்தவர் யாவரும் அதனை மீளப் பெற்று ஓங்குவாராயினர். எ.று.

     இணங்க எய்தவே என இயைக்க. குணங்கள் - நல்வாழ்வுக்குரிய நற்குணங்களைக் “குணங்கள்” என்று கூறுகின்றார். மணவாழ்வுகள் - இன்பம் குறித்தனவாதலால் அவற்றை, “மணங்கள்” என்று சிறப்பிக்கின்றார். பிணங்கள் - உயிர் நீத்தவர்கள்.

     (7)