5541.

          பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
          முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
          சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
          சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.

உரை:

     தூயதான அருட் பெருஞ்சோதியை யுடைய ஆண்டவன் என் முன் தோன்றிக் காட்சி தந்தருளியதால் பத்தியை யுடைய பெரு மக்கள் பணிந்து பாடியும் ஆடியும் மகிழ்கின்றனர்; முத்திக்குரிய ஞான ஒழுக்கங்களை உடையவர் மெய்ப்பொருளாகிய சிவ பரம்பொருளை எண்ணி மகிழ்கின்றார்கள்; சிவஞானிகள் சிவானந்தமாகிய தெளிந்த அமுதத்தை உண்டு இன்புறுகின்றார்கள். எ.று.

     பக்தர்கள் என்பது பத்தர்கள் என வந்தது. பணிந்து பாடினர் என இயைத்துக் கொள்க. முத்தர்கள் - சீவன் முத்தர்கள். அவர்கள் மெய்ப்பொருள் ஞானத்தையே விழைபவராதலால், “மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்” என்று கூறுகின்றார். முன்னுதல் - முற்பட எண்ணுதல். சித்தர்கள் - ஞானிகள். சிந்து என்பது ஞானம். இனிச் சித்தர்கள் என்பதற்கு அணிமா மகிமா முதலிய எண்வகைக் சித்திகளையும் உரிய வல்லவர் என்பது ஒன்று.

     (8)