131. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
அஃதாவது, பரம்பொருள் பற்றிப் பேசுகின்ற உலகத்தவர்க்குப் பரம்பொருள் சிவம் ஒன்றே என்றும், அஃது அன்புருவாய் விளங்குவது என்றும் எடுத்துக் கூறுவதாகும்.
கலிநிலைத் துறை 5544. அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
உரை: புலவர்களே! ஒப்பற்ற அருட் பெருந் தனிச் சோதியையுடைய பரமசிவன் அம்பலத்தில் நடிக்கின்ற பொருள் நிறைந்த பெருமை பொருந்திய திருநடனத்தைப் போற்றிப் பாடுவீர்களாக; அதனால் அறிவை மயக்கும் பெரிய பகையாகிய மலவிருளை நீக்கி மெய்யான ஞான வாழ்வைப் பெறலாம்; நான் சொல்லும் இது தெளிந்த பெரிய சிவத்தின் ஆணையாகச் சொல்வதாம் என்று தெளிவாக அறிவீர்களாக. எ.று.
அருள் ஞான ஒளியே உருவாக உடைய பெருமை உடையதாயினும் ஒப்புயர்வு இல்லது என்றற்கு, “தனிச் சோதி” என்று உரைக்கின்றார். பரமசிவன் அம்பலத்தில் நடிப்பது ஞானத் திருக்கூத்தாதலால் அதனை, “பொருட் பெருந் திருநடனம்” என்று புகழ்ந்துரைக்கின்றார். அறிவை மறைத்துத் துன்பத்தைத் தருவதாதலால், “மருட் பெரும் பகை” என்று மலவிருளைக் கூறுகின்றார். சிவபதத்தில் சிறந்து விளங்குவதாதலால் சிவனை, “சிவப்பதம்” என்று கூறுகின்றார். (1)
|