5548. துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
உரை: உலகத்து நன்மக்களே! துரியவெளிக்கு மேல் உளதாகிய அதீதம் எனப்படும் பரவெளியில் ஞானானந்த நடம் புரியும் பெரியதாகிய அருட்சோதி ஆண்டவன் அருளைப் பெறுவதே பெறற்குரிய பேறுகள் எல்லாவற்றினும் அருமை உடையதாகும்: மற்றவை எல்லாம் பெறுதற்கு எளியவை என்று அறிவீர்களாக; பெறுதற்குரியதாகிய நெறியைக் கூறும் இச்சொல் வேத வாக்காகும்; அன்றியும் மெய்ம்மை மொழியுமாம். எ.று.
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றினுக்கும் மேலதாய் உந்தி இடமாக நோக்கப்படுவதாய் உள்ள காட்சி “துரியம்” எனப்படுகிறது. அங்கே காணப்படும் சுகப் பிரபைக்கு இடமாவது துரியாதீதப் பரவெளி என்பதை விளக்குவதற்கு, “துரிய மேல் பரவெளி” என்று சொல்லுகின்றார். அவ்விடத்தே நிகழ்கின்ற திருநடனம் ஞான இன்ப நிலையமாதலின் அதனை, “சுக நடம் புரியும் பெரியதோர் அருட் சோதி” என்று புகழ்கின்றார். அருள்சோதி என்பது திருவருள் ஞான ஒளி; அதனைப் பெறுவதன் அருமை புலப்பட, “எவைக்கும் அரிய பேறு” என இயம்புகின்றார். அருமையுடைய பலவற்றுக்கும் மேலானது என்பார், “உரிய இம்மொழி மறைமொழி” என உரைக்கின்றார். (5)
|