5551. சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
உரை: பல கோடியாகிய சமயங்களும் சமயங்கள் தோறும் அமைந்த எண்ணில்லாத தெய்வங்களும் ஞான நெறியாகிய சன்மார்க்கத்தில் உள்ள எங்களையும் ஆளாக உடையதாகிய அம்பலத்தில் உள்ள இறைவனும் அதன்கண் பொருந்த இருந்து திருநடனம் புரிகின்ற திருவடியும் எல்லாம் சிவம் என்று அறிவீர்களாக. எ.று.
சமயங்கள் பற்பல என்பதற்குச் “சமயம் ஓர் பல கோடி” என்றும், அச்சமயங்களில் குறிக்கப்படுகின்ற தெய்வங்கள் பல கோடி என்றற்கு, “தெய்வங்கள் அனந்தம்” என்றும் கூறுகின்றார். அம்பலத்தில் ஆடும் இறைவன் திருவடியில் எல்லாம் அடங்கும் என்பதற்கு, “ஞான சன்மார்க்கத்து எமையும் உம்மையும் உடையது” என்று இயம்புகின்றார். (8)
|