5552. ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
உரை: உலகத்துப் பெரியவர்களே! ஆறு கோடி என்று சொல்லப்படும் சமயங்கள் அனைத்தினுள்ளும் அவற்றிற்கு மேல் மிக்கு விளங்குகின்ற சித்தாந்த வேதாந்த நாதாந்தங்களிலும் மேலும் காணப்படுகின்ற மற்றைய அந்தங்களிலும் சிவம் ஒன்றே பரம்பொருளாவதன்றி வேறு எதனையும் நான் காணவில்லை; கண்டிருந்தால் எனக்கு உரைப்பீர்களாக. எ.று.
ஆறு கோடி என்றது மிகப் பல என்னும் பொருள் அது. சித்தாந்தம் - ஆகம நெறி. வேதாந்தம் - உபநிடதங்களை நூல்களாகக் கொண்டு விளங்குவது. நாதாந்தம் - நாத தத்துவத்தை முடிவாகக் கொண்டது. மற்றைய அந்தங்களாவன்; போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்பன. இதனால் வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்ற ஆறினும் சிவம் ஒன்றே பரம்பொருள் என்று உரைக்கப்படுகின்றது என்பதாம். (9)
|