5553.

          கலைஇ ருந்ததோர் திருச்சிறம் பலத்திலே கருணை
          நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
          மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
          கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.

உரை:

     கலை உருவாய் அமைந்ததாகிய திருச்சிற்றம்பலத்தில் கருணை உருவாகிய சிவம் ஒன்றே இருந்தருளுகின்றது; அதனை அடைந்தால் நினைத்த நலங்கள் யாவையும் பெற்றுக் கொள்ளலாம்; ஆகவே மலை இருப்பது போல அதனிடத்தில் அன்புற்று இருப்பவர்களாயின் உடனே வந்து சேர்வீராக; அதுவன்றிக் கொலை, புலை முதலியவற்றை விரும்புகின்றவர்களாயின், நீவிர் உமது நிலை குலைந்து புறத்தே செல்வீர்களாக. எ.று.

     சிவபெருமான் கலையே உருவாகியவனாதலால் அவனுடைய அம்பலத்தை, “கலை இருந்ததோர் திருச்சிற்றம்பலம்” என்றும், அப்பெருமான் கருணைக் கடலாதலால், “கருணை நிலை இருந்தது” என்றும் கூறுகின்றார். மலை இருந்தது என இருத்தல், பற்று விடாது நிலையாக இருத்தல். கொலையும், புலையும் தீய நெறியனவாதலால், “கொலை விரும்புவீர் எனிற் புகுந்து ஏகுமின்” என்று புகல்கின்றார்.

     (10)