5555.

          அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
          பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவிவீர்
          மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
          தெருள்வி ளங்குவீர் ஞானசன்மார்க்கமே தெளிமின்.

உரை:

     நிலவுலகத்து மக்களே! அருளொளி திகழும் திருச்சிற்றம்பலத்தின்கண் எக்காலத்தும் அழிவில்லாத சிவ பரம்பொருள் எழுந்தருளுவதைக் கண்ணாற் கண்டு கொள்வீர்களாக; கண்டு கொண்டால் மயக்கவுணர்வை மனத்திற்கொண்டு வருந்தும் வாதனை நீங்கி அவனது அருள் வன்மையால் ஞானம் பெறுவீர்கள்; ஆகவே அந்த ஞானம் உணர்த்தும் சன்மார்க்கத்தை மேற்கொள்வீர்களாக. எ.று.

     அருள் விளங்கிய திருச்சிற்றம்பலம் என்பதில் அருள் என்பது அருள் ஞான ஒளியை என அறிக. சிவ பரம்பொருளை இங்கே “அழியா பொருள்” என்று குறிக்கின்றார். அதன்பால் தமக்குள்ள ஆர்வ மிகுதி புலப்பட, “காண்மினோ காண்மினோ” என்று அடுக்கிக் கூறுகின்றார். மருள் மலங்களால் உண்டாகும் மயக்கவுணர்வு. வாதனை - துன்பம். தெருள் - நன்ஞானம். இதனால் மருட்கை உணர்வு உண்டு பண்ணும் துன்பத்தின் நீங்கி அருள் ஒளி பெற்று ஞான சம்மார்க்கத்தைத் தெளிந்து அடைவீர்களாக என்று தெரிவித்தவாறாம்.

     (12)