5557.

     ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
          அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
     மாறாமல் மனஞ்சென்ற வுழிச்சென்று திகைப்பீர்
          வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
     நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
          நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
     ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
          எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

உரை:

     உலகியற் பித்து கொண்டு அலைகின்ற மக்களே! சிறிதும் தணியாமலும் கெடாமலும் நிறைந்த கோபத்தை உடையவர்களாக இருக்கின்றீர்கள்; உலகில் துன்பங்கள் தொடர்ந்து வருத்தும்போது அஞ்சாமல் எங்கும் திருகின்றீர்கள்; மனம் போன வழித் தடையின்றி மயங்குகின்றீர்கள்; நல்ல வழித் துறைகளைக் காணாமல் பழி உண்டாகும் நெறியிலே நின்று மணம் கமழாத பூப்போல வாழ்கின்றீர்கள்; இவ்வாற்றால் மூப்பும் நரை திரைகளும் மரணமும் எய்தியவழி என்ன செய்வீர்கள்; உயர்நிலைக்கு ஏறாமல் வீண் வழிகளிலே கீழ் நோக்கிச் செல்கின்றீர்கள்; இறுதியில் நீவிர் எதனைக் துணையாகக் கொள்வீர்; உரைப்பீர்களாக. எ.று.

     பித்துலகீர் என்பதை முன்பாட்டில் கூறியது போலக் கூறிக் கொள்க. இனிவரும் பாட்டுக்களுக்கும் இவ்வாறே உரைத்துக் கொள்க. ஆறுதல் - தணிதல். அவிதல் - இல்லாதபடிக் கெடுதல். கோபம் தணிவதும் இல்லாமற் கெடுவதுமாகிய நற்பண்புகளை இல்லாதவர்களை, “ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர்” என்று மொழிகின்றார். உலக வாழ்வில் துன்பங்கள் தொடர்ந்து வந்து நெருக்குவது இயல்பாதலால் அதற்கு அஞ்சாமல் நெறிப்பட நேர்ப்பட்டு ஒழுகுதல் நேர்மை என்பது தெரிவித்ததற்கு, “அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்” என்று அறிவிக்கின்றார். மனம் சென்ற வழியே செல்லுவது முறையன்றாதலின், “மாறாமல் மனம் சென்ற வழி சென்று திகைப்பீர்” என்று கூறுகின்றார். மாறுதல் - மனம் போன வழியே போகாமை; அங்ஙனமே சென்றால் பழி பாவங்கள் தோன்றி வாழ்வை மணம் இல்லாத பூப் போலக் கெடுத்து விடும் என்பாராய், “பழி படும்படிக்கே நாறாத மலர் போலும் வாழ்கின்றீர்” என்று எச்சரிக்கின்றார். மூப்பு - முதுமை. நரை - தலைமயிர் பால்போல் வெளுத்தல். திரை - உடலில் தோல் சுருங்குதல். மரணம் - சாக்காடு. ஏறுதல் - ஞான நெறி பற்றி இன்ப வாழ்வு நோக்கி முன்னேறுதல்.

     (2)