5558.

     ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
          ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
     மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
          மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
     காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
          கண்மூடித் திரிகின்றீர் கனிவொரும் இரப்போர்க்
     கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
          எத்துணை கொள்கின்றீர் புத்துல கீரே.

உரை:

     உலகியல் வாழ்வில் பித்துக் கொண்ட பெருமக்களே! அறிவால் ஆராய்தல் இல்லாமையால் நீங்கள் ஆதியும் அனாதியுமாகிய அருட்சோதி ஆண்டவனை அறிந்து கொள்கின்றீர் இல்லை; இறத்தலும் பிறத்தலும் இல்லாமைக்குரிய வழி ஒன்றும் தெரிந்து கொள்கின்றீர் இல்லை; இறைவனை மறவாமையும் மாறாகியவற்றை நினையாமையுமாகிய இரண்டு நெறிகளையும் சிறிதும் அறிகின்றீர் இல்லை; காய்த்துப் பழுக்கின்ற தன்மையில்லாத சிவஞானக் கருத்தை நினைவிற் கொள்ளாமல் கண்மூடி அறிவின்றி உழல்கின்றீர்கள்; இல்லாமையால் வந்து இரப்பவர்களுக்கு ஒன்றும் கொடாது மறுத்தலையே வாழ்க்கைக்கு இனிய துணை என்று சொல்கின்றீர்; இனி இன்ப வாழ்வுக்கு எதனைத் துணையாகக் கொள்கின்றீர்; உரைப்பீர்களாக. எ.று.

     ஆய்வுணர்வு இல்லாமையால் பரம்பொருளாகிய அருட்சோதி ஆண்டவனை உலகத்தவர் அறியாது ஒழுகுகின்றனர் என்பது பற்றி, “ஆயாமையாலே நீர் ஆதி அனாதியாகிய சோதியை அறிந்து கொள்கில்லீர்” என்று தெரிவிக்கின்றார். மாய்தல் - இறத்தல். மறத்தல் - இறைவன் திருவருளை மறத்தல். நினையாமை - அருள் ஞான நெறியை நினையாதொழிதல். காய்த்துப் பழுக்கின்ற காய் கனிகள் போலின்றி அறிந்தபொழுதே உள்ளத்தில் நிறைந்து இன்பம் செய்தலால் திருவருள் ஞானத்தை, காயாமை பழுக்கின்ற கருத்து” என்று கூறுகின்றார். கனிவு - அன்பு. அறியாதொழுகுவதைக் “கண் மூடித்திரிகின்றீர்“ என்று குறிக்கின்றார்.

     (3)