5559. சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை: உலக வாழ்வில் பித்துக் கொண்டு அலைகின்ற மக்களே! செத்து மறைகின்ற தன்மையின்றி வாழும் திறம் சிறிதும் உணர்கின்றீர்கள் இல்லை; தத்துவ ஞானத்தையும் இத்தகையது என அறிந்து கொள்கின்றீர்கள் இல்லை; பெரிய மாந்தை என்னும் நோயுற்ற குழந்தைகள் போல மெலிந்து வாழ்க்கையிலே கிடைக்கின்ற சிறிதாகிய இன்பத்தைப் பெற்று மகிழ்கின்றீர்கள்; காமமாகிய இருளில் கிடந்து அறிவின்றித் திரிகின்றீர்கள்: கற்க வேண்டியவற்றையும் கற்கின்றீர்கள் இல்லை; கருத்தாவாகிய இறைவனை நினையாமல் மயங்கி உலக வாழ்வில் உறங்குவதும் விழிப்பதும் செய்கின்றீர்கள்; இனி இன்ப வாழ்வு பெறுதற்கு எதனைத் துணை கொள்வீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
மரணம் இல்லாத பெருவாழ்வுக்கு வேண்டும் அறிவு நெறிகளை உணராமல் ஒழுகுகின்றீர்கள் என்பாராய், “சாமாந்தர் ஆகாத் தரம் சிறிது உணரீர்” என்று எடுத்துரைக்கின்றார். தரம் - தன்மை. சிறிதும் எனற்பாலது ஈற்றும்மை கெட்டுச் சிறிது என வந்தது. தத்துவ ஞானம் என்பது ஆன்ம தத்துவத்தையும் வித்தியா தத்துவத்தையும் சிவ தத்துவத்தையும் தெளிவாக உணர்தலாகும். இற்று - இத்தன்மையது. மாந்தை நோய் என்பது மலச்சிக்கலால் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் வகையில் ஒன்று. குழைதல் - மெலிதல். சிற்றின்பத்தை “அற்ப மகிழ்ச்சி” என்று கூறுகின்றார். காமாந்தகாரம் - காம இச்சையாகிய இருள். கற்பன - வாழ்வுக்கு இன்பத்தைத் தரும் ஞான நூல்கள். கருத்தன் - கருத்தின்கண் எழுந்தருளும் இறைவனாகிய தலைவன். (4)
|