5560.

     அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
          அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
     பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
          பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
     பிச்சையிட் டுண்ணவும் பின்படு கினர்
          பின்படு தீமையின் முன்படு கினர்
     இச்சையில் கண்முடீ எச்சுகம் கண்டீர்
          எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

உரை:

     உலக வாழ்வில் ஆசையுற்று அலைகின்ற மக்களே! உயிரையும் உடம்பையும் அறியும் வகையில் அறிகின்றீர்கள் இல்லை; உங்களுக்கும் உண்மையான தந்தையும் தாயும் இன்னார் என்று தெரிந்து கொள்கின்றீர்கள் இல்லை; பசுமையும் செம்மையும் வறுமையும் கலந்துள்ள உம்முடைய வாழ்க்கையினுடைய பண்பு ஒன்றும் இல்லாமல் இருக்கின்றீர்கள்; இல்லாதவர்களுக்குப் பிச்சையுட்டு உண்ண பின்வாங்குகின்றீர்கள்; பின்பு தோன்றும் துன்பத்தை முன்பே படுகின்றீர்கள்; இச்சித்த பொருள்களின்மீது கண்மூடிச் சென்று எத்தகைய சுகத்தைக் காண்கின்றீர்கள்; இனி எய்துதற்குரிய இன்ப வாழ்வுக்கு எதனைத் துணை கொண்டுள்ளீர்; உரைப்பீர்களாக. எ.று.

     அச்சு உயிர் அறியும் வகையாவது உயிரினுடைய உணர்தற்றன்மையும் உடம்பினுடைய சடத் தன்மையையும் தனித்தனி அறிதல். உலகுயிர்களுக்கு உண்மைத் தாயும் தந்தையும் சிவசத்தியும் சிவனுமாம் என உணராது உலகில் தம்மைப் பெற்ற தாயையும் தந்தையையுமே பெற்றோர் எனக் கருதி ஒழுகுவது பற்றி, “அம்மையும் அப்பனும் ஆர் எனத் தெரியீர்” என்று இயம்புகின்றார். பச்சை -பசுமை. கருமை என்பது வறுமை என்னும் பொருளில் வந்தது. உலகியல் வாழ்வில் வளமையும் வறுமையும் இரண்டும் இல்லாத செம்மையும் கலந்து காணப்படுதலால், “பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் பலித்த வாழ்க்கை” என்று பகருகின்றார். வறுமையைக் கருப்பு என்பது உலக வழக்கு. தீய செய்கையால் பின்னர் வருகின்ற துன்பத்தை, “பின்படு தீமை” என்று செப்புகின்றார். இச்சித்த பொருள் மேல் சென்று உழலும் இயல்பை “இச்சை” என்று இசைக்கின்றார்.

     (5)