5561. வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை: உலக வாழ்வில் ஆசை மிகுந்துறையும் மக்களே! வட்டி மேல் வட்டி வாங்குகின்ற நெறியில் நிற்கின்றீர்களே ஒழிய வட்டியைப் பெருக்கிக் கொள்கின்ற வழியை அறியாதவர்களாய் இருக்கின்றீர்கள்; பெட்டி மேல் பெட்டிகளை வைத்து அடுக்கிப் பயன் கொள்ளும் வழியைத் தெரிந்திருக்கின்றீர்களே அன்றி வைராக்கிய பெட்டியை நிரப்பிக் கொண்டு அதனோடு சேர்ந்து மகிழ்ந்து இருக்கின்றீர்கள் இல்லை; அதே சமயத்தில் உணவில்லாமையால் பட்டினி கிடக்கின்றவர்களைக் கண்ணால் பார்க்கவும் விரும்புகின்றீர்கள் இல்லை: உண்பது பழங்கஞ்சியாயினும் அதனை அவர்களுக்குக் கொடுக்க எண்ணுகின்றார்கள் இல்லை; எட்டி மரம் போல் வாழ்ந்துகொண்டு குட்டிச் செடி போல் கிளைத்திருக்கின்றீர்கள்; ஆனால் இறுதி நாளில் எதனைத் துணை கொள்கின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
தாம் பெற்ற பணத்தைப் பெருக்குவதற்காக வட்டிக்குக் கொடுத்து வாங்குகின்ற செயல் நாட்டில் பெருகி இருப்பது பற்றி, “வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர்” என்று கூறுகின்றார். இறைவனுடைய திருவருளைப் பெருகுவதற்கு எண்ணாமை தோன்ற, “வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்” என உரைக்கின்றார். பெட்டிகளை அடுக்கி வைத்தாளும் செல்வன் நிலையை விதந்து, “பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர்” என்று சொல்லுகின்றார். ஒட்டி உள்ளிருந்தீர் - வயிற்றோடு பொருந்தி மகிழ்ந்திருக்கின்றீர்கள். எட்டி மரம் - தொட்ட இடமெல்லாம் கசக்கும் இயல்புள்ளது. அதுபோல் தம்பால் வந்தவர்க்கு ஒன்றும் கொடாது வருத்துகின்ற செயலை, “எட்டி போல் வாழ்கின்றீர்” என உரைக்கின்றார். கொட்டி - நீரில் கிளை கிளையாய்த் தழைத்து வளரும் ஒருவகைக் கொடி. அதுபோல் மக்களும் சுற்றமும் கொண்டு வாழ்பவர்களை, “கொட்டி போல் கிளைத்தீர்” என்று கூறுகின்றார். வட்டியும் பெட்டியும் பட்டினி கிடப்பார்க்கு ஈயாமையும் வழித் துணை ஆகா என்பது கருத்து. (6)
|