5562.

     வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
          வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
     முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
          மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
     மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
          வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
     என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
          எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

உரை:

     உலக வாழ்வில் பித்துக்கொண்டு வாழும் மக்களே! வன்மையான சொற்களைச் சொன்னாலல்லது வாய் திறவாது ஒழுகுகின்றீர்கள்; வாய்மை தூய்மையாகிய இரண்டையும் காய்ந்து பேசும் சொற்களால் வளர்க்க நினைக்கின்றீர்கள்: முன் சொல்வது ஒன்றும் பின் சொல்வதும் ஒன்றுமாகத் தீவினையாகிய மூட்டையைக் கட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி முட்டிக் கொள்கிறீர்கள்; அதுவே அன்றிப் பெருமானாகிய சிவன் சொல்லும் நிலைத்த சன்மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழியில் செல்கின்றீர்கள்; பின்னர் சாகும் நிலையில் சாவாயில் புகுந்து யாது சொல்லப் போகின்றீர்கள்; பின்னே இன்னது சொல்வது அறியாதவர்களாகிய நீங்கள் யாதினைத் துணை கொள்ளப் போகின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.

     வன்சொல் - கடுஞ்சொல். காய்மை - வெறுத்தும் சினந்தும் பேசும் செயல். முன்னுக்குப் பின் முரண்படப் பேசித் துன்புறுவதை, “முன்சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றார் தீவினை மூட்டை” என்று ஓதுகின்றார். மூட்டுதல் - கலகம் விளைவித்தல்; உண்டு பண்ணுகின்றீர்கள் என்றுமாம். மன், என்ற சிவபெருமானை, அப்பெருமான் சொல்வது சன்மார்க்கமாதலால் அதனை, “மன்சொல்லும் மார்க்கம்” என்று புகழ்ந்துரைக்கின்றார். மரணத்தீர் - சாவதை இயல்பாக உடையவர்களே. மரண காலத்தில் ஒன்றும் சொல்வதற்கின்றி வருந்துவீர்கள் என்பாராய், “மரணத் தீர்ப்புக்கே என் சொல்ல இருக்கின்றீர் இன்சொல்வது அறியீர்” என்று பேசுகின்றார். மரண காலத்தில் வாயடைத்து விடுவதால் ஒன்றும் சொல்ல இயலாமல் வருந்துவீர்கள் என்பது கருத்து.

     (7)