5563. துன்மார்க்க நடையிடைத் தூக்குகின் றீரே
தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை: உலக வாழ்க்கையில் பித்துக்கொண்டு ஒழுகுகின்ற பெருமக்களே! துன்மார்க்க வழியில் நல்லுணர்வின்றி இயங்குகின்றீர்களே அன்றி அவ்வியக்கத்தை விடுத்து நல்லறமாகின்ற துணையைச் சிறிதும் எண்ணுகின்றீர் இல்லை; சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்து வாழவோ சாக்காட்டையும் பிறப்பையும் போக்கிக்கொள்ள விரும்புகின்றீர் இல்லை; பல்வேறு வழிகளில் சென்று துன்புறுகின்ற வஞ்சனை நிறைந்த உள்ளத்தை அடக்கிக் கொள்ளாமல் பசித்து வந்தவருடைய சோர்ந்த முகத்தைப் பார்த்து ஒருபிடிச் சோறு தருவதற்கும் இசைகின்றீர்கள் இல்லை; உங்களுடைய மார்க்கந்தான் யாது? நீங்கள் விரும்பும் சுகம் யாது? உங்களுடைய வாழ்க்கையின் இயல்புதான் யாதாம்; இறுதிக் காலத்தில் எதனைத் துணையாகக்கொள்ள நினைக்கின்றீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
துன்மார்க்க நடை - துன்பத்தை விளைவிக்கின்ற தீய ஒழுக்கம். தீய ஒழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் செயலை, “தூக்கம்” என்று சொல்லுகின்றார். சாவு - சாக்காடு. பன்மார்க்கம் - பலவாகிய நெறிகள். படிற்றுள்ளம் - வஞ்சனை நிறைந்த உள்ளம். பசித்தவர்தம் முகம் பார்த்து உணவளித்தல் நல்லறமாதலால் அதனை இங்கே விதந்துரைக்கின்றார். இவர்களுடைய வாழ்வில் நன்னெறியோ நல்ல சுகமோ ஒன்றும் புலப்படாமை பற்றி, “என் மார்க்கம் எச்சுகம் யாது நும் வாழ்க்கை” என்று வினவுகின்றார். (8)
|