5564.

     பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே
          புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால்
     செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில்
          சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர்
     கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே
          கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
     எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர்
          எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

உரை:

     உலக வாழ்வில் பித்துக்கொண்டு அலைகின்ற பெரு மக்களே! பொய்ம்மையாகிய நெறியை மேற்கொண்டு இவ்வுலகில் வாழ்கின்றீர்கள்; ஆனால் இங்கே புலால் நாற்றம் நாறுகின்ற பொய்யான இவ்வுடம்பு வீழ்ந்தொழிந்தால் வயல்களில் வரம்பு கட்டி வாழ்வது போலும் பெருமிதம் நீங்கி நரகத்தில் சிறு புழுபோல மயங்கி வருந்த வேண்டி வரும் என்பதை அறிகின்றீர்கள் இல்லை; கை கட்டிக் கொண்டும் வாயை மூடிக்கொண்டும் வணங்கி நிற்பவர்களைக் காண்பீர்களாயின் அவர்களை இகழ்ந்து இரக்கமின்றிச் சிரிக்கின்றீர்கள்; உடலில் உண்டாகிய புண்ணாகிய கட்டியை மொய்க்கும் சிறு கொசுகுகளிலும் அற்பராகிய நீவிர் இறுதிக் காலத்தில் எதனைத் துணை கொள்வீர்; உரைப்பீர்களாக. எ.று.

     பொய் யுரைத்தல் முதலிய பொய்ம்மை ஒழுக்கங்கள் உடையவர்களைப் பார்த்து, “பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர்” என்று ஏசுகின்றார். செய் - வயல். வயல் சிறிதாயினும் அதனை வரம்பு கட்டி உழுது பயிர் செய்யும் உழவனது பெருமிதத்தை, “செய் கட்டி வாழ்கின்ற செருக்கு” என சினந்துரைக்கின்றார். கைகட்டி வாய் பொத்துதல் வணங்கி நிற்பதை விளக்கும் செயல் நிலை. வாய் பொத்துதல் - வாயைக் கையால் மூடிக் கொள்ளுதல். கருணை ஒன்றில்லீர் கை கொட்டிச் சிரிக்கின்றீர் என இயையும். இல்லீர் என்பதை எச்சப் பொருளில் வந்த முற்று வினை என்க. எய்கட்டி - உடம்பில் உண்டாகும் புண்ணாகிய கட்டி.

     (9)