133. புனித குலம் பெறுமாறு புகலல்
அஃதாவது சாதி சமய சாத்திர கோத்திரங்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்கள் இனம் ஒருமைத் திறம் இழந்து சிதறுண்டுக் கெடுவது நோக்கி மனம் வருந்திய வடலூர் வள்ளல், அவ்வேறுபாடுகளின்றி எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஓர் இனம் என்ற பரந்த பான்மையுடன் அருட்சோதி ஆண்டவனை இப்பாட்டுக்களால் வேண்டுகிறார். புனித குலம் என்பது மேற்கூறிய வேற்றுமைகளின்றி நிலவும் ஒருமைச் சமுதாயம். புனிதம் - தூய்மை.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5566. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
உரை: சாதி மதம் நெறிகள் சாத்திரங்கள் கோத்திரங்கள் முதலியவற்றில் மனம் கொண்டுஒருவரோடு ஒருவர் பூசலிட்டு வருந்துகின்ற மக்களே! இவற்றிற்காக ஊர்தோறும் அலைந்து வீணாய் கெடுவது உங்கட்கு அழகாகாது; நீதி விளங்குகின்ற சன்மார்க்க நெறியில் உங்களை நிறுத்தி இன்பம் எய்துமாறு காண்பதற்கு அம்பலத்தில் ஆடும் ஒப்பற்ற தலைவனாகிய சிவபெருமான் நீங்கள் வாழும் வீதியிலே அருட் சோதி விளையாடல் புரிவதற்காக எழுந்தருளும் சமயம் இதுவாதலால் வாருங்கள் என உங்களை அழைக்கின்றேன். எ.று.
மதங்கள் - சமயத்தில் உட்கொள்கைகள். சாத்திரச் சந்தர - சாத்திரங்களை எடுத்தோதுகின்ற ஆரவாரம். கோத்திரச் சண்டை - கோத்திரங்களைச் சொல்லி உயர்வு தாழ்வு பேசிப் பூசலிடுதல். அபிமானம் - விருப்பம். எல்லோர்க்கும் பொதுவான நீதிகளைக் கொண்டது சன்மார்க்கமாதலால், “நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே” என்று கூறுகின்றார். அருட் சோதி விளையாடலாவது அருள் ஞான நலத்தை யாவரும் எய்த விளங்குதல். (1)
|