5567. காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
உரை: காடுகளை வெட்டி நிலங்களைச் செம்மை செய்து காட்டில் விழுந்து கிடக்கின்ற சருகு முதலிய எருவைப் பெய்து கரும்பு பயிர் செய்வதை விடுத்து விஷத்தை விளைவிக்கும் பயிர் செய்து அறிவு மயங்குகின்ற உலகத்தவர்களே! உங்கள் உடம்பை விட்டு உயிர் போயின பின் என்ன செய்வீர்கள்? எங்கே இருந்து வாழ்வீர்கள்? ஐயோ, நீங்கள் பயனை நினைக்கின்றீர்கள் இல்லையே; அரும்பாடு பட்டும் பயன் அறியாமல் பாழ் நிலத்துக்கும் நீர் இறைத்துக் காலத்தைப் போக்கினீர்கள்; இதுவரையில் நீங்கள் பட்ட பாடெல்லாம் போதும்; பரமசிவன் அருள் புரிய வருகின்ற தருணம் இதுவாதலால் நீங்கள் உங்களை அர்ப்பணித்து வருவீராயின் நீங்கள் மிக்க இன்பம் பெறுவீராக; நான் எளிய பொருளைச் சொல்லுகின்றேன் இல்லை; உண்மையையே உரைக்கின்றேன்; ஏற்றுக் கொள்க. எ.று.
நிலம் திருத்துதலாவது நிலத்தை அளந்து வரம்பு வகுத்துக் கல்லும் களையும் போக்கிச் செம்மை செய்தலாகும். காட்டெரு - காடுகளில் விழ்ந்து கிடக்கும் தழையும் சருகுகளும் விலங்குகளின் உலர்ந்த சாணமும் ஆகும். கடு என்பது விஷம். உயிர்க்குத் துன்பம் செய்யும் பொருள் விதைத்து எனற்பாலது விதைத்து என வந்தது. இனிய சாற்றைத் தந்து இன்புறுத்தும் கரும்பைப் பயிர் செய்யாது கைவிடுகிறீர்கள் என்பதற்கு, “கரும்பை விட்டு” என உரைக்கின்றார். கூடு - உடம்பு. உயிர்போன பின் உடம்பு அழிந்து விடுமாதலால், “எங்கே குடியிருப்பீர்” என வினவுகின்றார். விளைபயனை நோக்காமல் வெறிதே வருந்துவது பற்றி, “குறித் தறியீர்” என்று கூறுகின்றார். பாழ் என்பது பாழ்பட்ட நிலம். பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பது பயனில் செயல் என்பது விளங்க, “பாழ்க்கு இறைத்தீர்” எனப் பகர்கின்றார். ஈடு கட்டி வருதல் - மனம் ஒருப்பட்டுத் தம்மையே அர்ப்பணித்து வருதல். நான் சொல்வது எளிதில் புறக்கணிக்கப்படும் பொருளுமன்று பொய் உரையுமாறு என்பாராய், “எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை உரைத்தேனே” என்று விளங்க உரைக்கின்றார். நீங்கள் இதுகாறும் பயனில்லாத செயல்களை மேற்கொண்டு மனம் மாசு படிந்து கெட்டீர்கள்; இனியாகிலும் சன்மார்க்க அருள்ஞானம் பெற்று இன்பம் பெறுவீர்களாக என்பது கருத்து. (2)
|